உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நிலவி வருகிறது. ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் நிலையில் உக்ரைன் நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறினர். மேலும் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போர் இன்னும் சில தினங்களில் ஓராண்டை நிறைவு செய்யவுள்ளது.
இதனிடையே ரஷ்ய அதிபர் புதின் கூலிப்படைகளை அனுப்பி என்னைக் கொல்ல முயன்றதாகவும், ஆனால் அதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட உக்ரைன் படைகள், கூலிப்படைகளைக் கொன்று தன்னைக் காப்பாற்றியதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இதனை முற்றிலும் ரஷ்யா மறுத்தது. இந்த நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஒருபோதும் கொல்லமாட்டேன் என ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளதாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் தெரிவித்திருக்கிறார். ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த மார்ச் மாதத்தில் உச்சத்தில் இருந்தபோது இரு நாட்டு அதிபர்களை சமரசம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு, புதின் மற்றும் ஜெலன்ஸ்கி இருவரையும் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட் தனித்தனியே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நப்தாலி பென்னட், “உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய திட்டமிடுகிறீர்களா என்று ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்டேன். அதற்கு ‘இல்லை நான் அவரை கொல்லமாட்டேன்’ என்று உறுதியாக கூறினார். பின்னர் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு புதின் சொன்னதை கூறினேன். அதற்கு அவர் ‘உண்மையாகவா?’ எனக் கேட்டார். அதற்கு, ‘நான் 100 சதவீதம் உறுதியாக சொல்கிறேன்; புதின் உங்களை கொல்லமாட்டார்’ எனப் பதிலளித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.