எந்த ஒரு அமைதி முயற்சிகளில் ஈடுபடவும் இந்தியா தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசியதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த சில மாதங்களாகப் போர் நிலவி வருகிறது. ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் நிலையில் உக்ரைன் நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறினர். அதேபோல், போர் சமயத்தில் அங்குச் சிக்கித் தவித்த இந்திய மருத்துவ மாணவர்களை மத்திய மாநில அரசுகள் பத்திரமாக மீட்டது.
இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து இந்தியப் பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைப்பேசியில் உரையாடியுள்ளார். அப்போது உக்ரைனில் நிலவிவரும் சூழல் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்ததாகவும்; போரை நிறுத்த இராணுவம் மூலம் தீர்வு காணமுடியாது என்றும், தூதரகம் மூலம் பேச்சு வார்த்தையைத் துவங்க வேண்டியது அவசியம் என்றும், உக்ரைன் ரஷ்யா இடையிலான பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் முயற்சியில் இந்தியா பங்காற்றத் தயாராக இருப்பதாகப் பிரதமர் மோடி கூறியதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.