ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி சிட்னி நகரில் இந்தியர்கள் உட்பட 21,000க்கும் அதிகமானோர் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்குள்ள இந்தியர்கள் 'வெல்கம் மோடி' என ட்ரோன்களை பறக்க விட்டு அவரை வரவேற்றனர்.
ஆஸ்திரேலிய இந்தியர்கள் முன் பேசிய பிரதமர் மோடி, ''இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உறவு பரஸ்பர நம்பிக்கை மரியாதையால் உருவானது. ஆஸ்திரேலியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட பல இந்திய மொழிகளை பேசும் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்தியா மீதும் ஆஸ்திரேலியா மீதும் பற்று கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியா மக்கள் இந்தியர்களிடையே வேற்றுமையில் ஒற்றுமை என்பதை ஏற்றுக் கொண்டு ஒன்றாக பயணிக்கின்றனர். கிரிக்கெட் களத்தில் மட்டும் இந்தியா ஆஸ்திரேலியாவின் உறவு நீடிக்கவில்லை. களத்திற்கு வெளியேயும் உறவானது தொடர்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேர்ன் வார்னே மரணத்தின் போது இந்தியாவும் துக்கத்தில் பங்கு கொண்டது'' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்பொழுது பிரதமர் மோடி குறித்து பேசுகையில் 'பாஸ்' எனக் குறிப்பிட்டுப் பேசினார் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ்.