சிரியா நாட்டில் 2011 ஆம் ஆண்டின் போது, அந்நாட்டு அதிபர் பஷார் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக அங்கு புரட்சி வெடித்தது. இந்த உள்நாட்டுப்போர் தொடங்கியதிலிருந்தே, அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலால், சில முக்கிய நகரங்கள் கிளர்ச்சியாளர்களின் கைவசம் சென்றது. கடந்த 2012ஆம் ஆண்டு இந்த போர் தீவிரமடைந்ததன் மூலமாக, சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகக் சொல்லப்படுகிறது.
அதன் பிறகு ரஷ்யா, ஈரான் மற்றும் ஈரானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பு, ஹமாஸ் அமைப்பு ஆகிய அமைப்புகள் அதிபர் பஷார் அல்-ஆசாத் அரசுக்கு ஆதரவு அளித்ததால், அங்கு அரசின் ஆட்சியை நடத்தி வந்தார். கடந்த சில வருடங்களாக மோதல் ஏற்படாமல் இருந்த நிலையில், கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஹெச்டிஎஸ் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. தொடர்ந்து முன்னேறி வந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பு, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றினர். இவர்களின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக ரஷ்யாவும், சிரியாவும் வாழ்வழித் தாக்குதல் நடத்தி வந்தாலும், அவர்கள் தொடர்ந்து முன்னேறி மற்ற பெரிய நகரமான ஹமா பகுதியையும் கைப்பற்றினர்.
அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றிய கிளர்ச்சியாளர் படையினர், தொடர்ந்து முன்னேறி தற்போது தலைநகர் டமாஸ்கஸ் நகரையும் கைப்பற்றியுள்ளனர். நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வருவதால், அந்நாட்டு அதிபர் பஷார் அல்-அசாத் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் இருந்து தப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிபர் பஷார் அல்-அசாத் தப்பிச் சென்ற சிரியன் ஏர்லைன்ஸ் இலியுஷின்-II 76T ரக விமான ரேடாரில் இருந்து மாயமானதாக தகவல் வெளியாகியிருக்கிறது.