இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களை அளித்து உதவி வருகின்றன. இந்தநிலையில், அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர் நிறுவனம், இந்தியாவிற்கு 70 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்துகளை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 510 கோடியாகும்.
இந்த மருந்துகள் அனைத்தும், இந்தியாவில் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனாவிற்கெதிராக உருவாக்கப்பட்ட முதலிரண்டு தடுப்பூசிகளில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பைசர் நிறுவனம், தங்கள் கரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி பெறுவதற்காக மத்திய அரசுடன் பேசி வருகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி, "துரதிருஷ்டவசமாக பல மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தும், எங்கள் தடுப்பூசி இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை. தடுப்பூசிக்கு விரைவாக ஒப்புதல் பெறுவது குறித்து இந்திய அரசுடன் ஆலோசித்து வருகிறோம்" எனக் கூறியுள்ளார். பைசர் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி கேட்டு இந்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில், பைசர் தடுப்பூசி 95 சதவீத செயல்திறன் மிக்கது மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளற்றது என்பதற்கான ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளது என அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.