அமெரிக்க வான்படை விமானங்கள் பறக்கும் தட்டுகளைக் கடந்து செல்லும் சில வீடியோக்கள் இணையத்தில் பரவிவந்த நிலையில், இவற்றின் முழுமையான வீடியோவை அமெரிக்காவின் பென்டகன் வெளியிட்டுள்ளது.
பறக்கும் தட்டு தொடர்பான மூன்று வீடியோக்கள் 2007 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இணையத்தில் கசிந்தன. இந்த காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு பறக்கும் தட்டு குறித்த பல கருத்துகள் இணையத்தில் தொடர்ந்து உலா வந்துகொண்டிருந்தன. இந்நிலையில் இதன் உண்மையான வீடியோக்களை அமெரிக்கா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த மூன்று வீடியோக்களும் 2004 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க வீரர்களின் விமான பயிற்சியின் போது எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள மூன்று வீடியோக்களில் இரண்டு வீடியோக்களை நியூயார்க் டைம்ஸ் 2017- இல் வெளியிட்டது. மற்ற வீடியோவை டூ தி ஸ்டார்ஸ் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அறிவியல் அமைப்பு வெளியிட்டது.
இந்த மூன்று வீடியோக்களும் நீண்ட நாட்களாக இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பிவந்த சூழலில் இதன் முழு வீடியோவை பென்டகன் அமைப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. பறக்கும் தட்டு எனக்கூறப்பட்ட அந்த விண்கலத்தை, 'அடையாளம் காணப்படாத பொருள்’ என அமெரிக்கா தற்போது குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பென்டகன் செய்தித் தொடர்பாளர் சூ கோஃப், "பரப்பப்பட்ட காட்சிகள் உண்மையானதா இல்லையா, மற்றும் இதன் முழு வீடியோ உள்ளதா இல்லையா... என்பன உள்ளிட்ட பல கேள்விகள் இதனையொட்டி எழுந்துவந்தன. எனவே மக்களின் இந்தச் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலேயே தற்போது இந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.