பாகிஸ்தான் மற்றும் சவுதியின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு காஷ்மீர் விவகாரம் முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் வளைகுடா பத்திரிகையில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதில் மிகமுக்கியமாக 6.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை இருநாட்டுத் தலைவர்களும் செய்துகொண்டனர். அதன்படி பணம் பெற்றுக்கொள்ளாமல் 3.2 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கச்சா எண்ணெய் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எனவும், மூன்று பில்லியன் டாலர்கள் கடன் வசதியைப் பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு ஒரு முறை சவுதி வழங்கும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக மூன்று பில்லியன் டாலர்களைப் பாகிஸ்தானுக்கு சவுதி வழங்கியிருந்தது. மேலும் கச்சா எண்ணெய்யையும் சவுதி வழங்கி வந்தது.
இந்த சூழலில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வரும் பாகிஸ்தான், தனது கருத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், 57 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில், அவ்வமைப்பின் தலைமையான சவுதியிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், பாகிஸ்தானின் கோரிக்கையைச் சவுதி நிராகரித்த நிலையில், பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி அளித்த நேர்காணல் ஒன்றில் சவுதி மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழலில், பாகிஸ்தானுடனான உறவை முறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே 6.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் சவுதி ரத்து செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தங்கள் நாடு வழங்கிய மூன்று பில்லியன் டாலர் கடனை உடனே திரும்ப தரவும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது சவுதி.