
பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் இன்று வழக்கம்போல் தொழுகை நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 1.40 மணியளவில் மசூதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தற்போது வரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர், தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பில் மசூதி கட்டிடத்தின் ஒருபக்கம் இடிந்து விழுந்தது. அதன் மூலமே மக்கள் மீட்கப்படுகின்றனர் என்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் அங்கு கிட்டத்தட்ட 250க்கும் அதிகமானோர் இருந்து இருக்கலாம் என்றும், இதனால் உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.