இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்காமல் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை இல்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
இந்தநிலையில், சவுதி தலைநகர் ரியாத்தில் நடைபெறும் பாகிஸ்தான் - சவுதி முதலீட்டு மன்றக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது குறித்துப் பேசினார். அப்போது இருபது ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டி இந்தியாவை சீண்டினார்.
பாகிஸ்தான் - சவுதி முதலீட்டு மன்றக் கூட்டத்தில் இம்ரான் கான் பேசியதாவது, “சீனாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. ஆனால் எப்படியாவது இந்தியாவுடனான உறவை மேம்படுத்தினால், கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியால் நேற்று (24.10.2021) இரவு விளாசப்பட்ட பிறகு இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது குறித்து பேச இது மிகவும் நல்ல நேரம் அல்ல என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
தொடர்ந்து அவர், "இது எல்லாமே காஷ்மீர் மக்களுக்கு மனித உரிமைகள் வழங்குவது மற்றும் 72 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உத்தரவாதம் அளித்தபடி காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்குவது பற்றியது. அந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டால் எங்களுக்கு வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை. இரு நாடுகளும் நாகரிகமான அண்டை நாடுகளாக வாழலாம். அதற்கான சாத்தியத்தைக் கற்பனை செய்து பாருங்கள். இந்தியா - பாகிஸ்தான் வழியாக மத்திய ஆசியாவிற்கான அணுகலைப் பெறலாம். அதனையொட்டி டெல்லி இரு பெரிய சந்தைகளுக்கான அணுகலைப் பெறலாம்" என தெரிவித்துள்ளார்.