போர்முனைப் பகுதிகளில் இருந்து சொந்த நாடுகளில் வாழ முடியாத சூழலில் உயிரைப் பணயம் வைத்து வேறு நாடுகளுக்குச் சென்று அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கை, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து மக்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து பல்லாயிரக்கணக்கான கி.மீ கடந்து கடல் வழியாகச் சிறிய ரக கப்பலில் ஆபத்தான முறைகளில் பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா வந்துள்ளனர்.
அப்படி அகதிகளாக வந்த 12 ஆயிரம் பேருக்கு ஆஸ்திரேலியா அரசு கடந்த 13 ஆண்டுகளாக நிரந்தர விசா வழங்கவில்லை. நிரந்தர விசா கிடைக்காததால், தங்கள் உழைப்பில் கிடைக்கும் வருவாய் உணவு, உறைவிடம், மருத்துவச் செலவுக்கே சரியாகப் போவதால் தங்களின் 'கனவான குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாவே உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
நிரந்தர விசா கேட்டுத் தொடர்ந்து போராடும் இலங்கை, ஈரான் மக்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ந் தேதி 22 பெண்கள் மெல்போனில் இருந்து பாராளுமன்றம் உள்ள கான்பரா நோக்கி 670 கி மீ நடை பயணத்தைத் தொடங்கி கடினமான பாதைகளில் வலிகளைக் கடந்து நடந்து அக்டோபர் 18 ந் தேதி பாராளுமன்றம் சென்றடைந்தனர். அதே போல இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தினுசன் என்ற கிரிக்கெட் வீரர் 1400 கி மீ சைக்கிளில் பயணம் செய்து குறிப்பிட்ட நாளில் பாராளுமன்றம் முன்பு நடந்த பிரமாண்ட போராட்டத்தில் பங்கேற்றார். இதில் ஆயிரக்கணக்கான அகதிகளாக வாழும் மக்களும் கலந்து கொண்டனர். பல எதிர்க்கட்சி எம்.பிகளும் ஆதரவு குரல் எழுப்பினர். ஆனால் கோரிக்கை தான் நிறைவேறவில்லை.
இந்த நிலையில் தான் மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பன், அடிலைட், பிரிஸ்பேன் உள்பட 5 இடங்களில் போலிசாரின் அனுமதி பெற்று 50 நாட்களுக்கு மேலாகத் தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் குழந்தைகளும் பங்கேற்றுள்ளனர். தொடர் காத்திருப்பு போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. இந்த நிலையில் அனுமதி பெற்று 23 நாட்களாகக் காத்திருப்பு போராட்டம் நடக்கும் பிரிஸ்பேன் நகரில் போராட்டக்களத்திற்கு வந்த போலீசார் இந்த இடத்தில் போராட்டம் நடத்தக் கூடாது என்றும், இன்று(10.9.2024) மாலை 5 மணிக்குள் போராட்டக் களத்தை அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதுபோராடும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிரிஸ்பேன் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பலரும் போராட்டக் களத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அதே சமயம் போலீசாரும் வந்த வண்ணமே உள்ளனர்.