இந்தியப் பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக கடந்த 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடியின் வருகைக்கு அந்தநாட்டின் சில இஸ்லாமிய அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்தியாவில் சிறுபான்மையினர் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாவதாகக் கூறி, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.
இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் வெடித்த மோதலில் 11 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என வங்கதேச மருத்துவர்களும், போலீஸாரும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பிரதமர் மோடி இந்தியாவிற்குத் திரும்பிய அதேவேளையில், வங்கதேசத்தில் கலவரம் வெடித்தது. அந்தநாட்டில், போராட்டக்காரர்கள் சிலர் பிரம்மன்பாரியாவில் ரயிலை தாக்கி சேதப்படுத்தியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரம்மன்பாரியாவில்சில இந்துக்கோவில்கள் தாக்கப்பட்டதாகவும், அரசுக்கு சொந்தமான சில இடங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகவும் ஜாவேத் ரஹீம் என்ற பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். பல இடங்களில் வங்கதேச போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள், தங்கள் மீது கற்களை வீசி தாக்கியதாக போலீசார் கூறியுள்ளனர்.
வங்கதேச தலைநகர் தாக்கவில் கடந்த வெள்ளிக்கிழமை, போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். ஹெபசாத்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு இந்த வன்முறை குறித்து, அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்தது. மேலும் போலீஸார் படுகொலையில் ஈடுபட்டதாகக் கூறி, அதனைக் கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியதுடன், நேற்று (28.03.2021) நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் நிலைமை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராததால், அந்தநாட்டில் போலீஸாரும் இராணுவத்தினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.