அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஎஸ் இடையே ஒன்றைத் தலைமை தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தற்பொழுது வரை கருத்து முரண்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் அதிமுக மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் சந்தித்திருந்தார். அதேபோல் எடப்பாடி தரப்பு பண்ருட்டி ராமச்சந்திரனை பெரியதாக எடுத்துக்கொள்ளாத நிலையில் தற்பொழுது பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து நம்மிடம் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட ஓபிஎஸ் ஆதரவளர் புகழேந்தி, ''இது மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய அறிவிப்பு. காரணம் அரசியல் தலைவர்களில் மிக மூத்தவர், எம்ஜிஆரோடு மிக நெருக்கமாக பழகியவர் பண்ருட்டி ராமச்சந்திரன். ஐநா சபையில் அவரை பேசவைத்து எம்ஜிஆர் அழகுபார்த்தார். தினமும் ராமாவரம் தோட்டத்தில் இவரோடு பேசிய பிறகே சட்டமன்றத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் எம்ஜிஆர். அப்படிப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு. பாமக கட்சிக்கு ஒரு அங்கிகாரம் பெற்றுக்கொடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதற்கு பின் அவர் தேமுதிகவிற்கு சென்றார் அதன்பின் தான் விஜய்காந்த் எதிர்க்கட்சி தலைவரானார். அதேபோல் இப்பொழுது ஓபிஎஸ் பக்கத்திலிருந்து ஆலோசனை வழங்குவது மேலும் மேலும் எங்கள் கரம் வலுப்படும். நாங்கள் மேலே வருவதற்கு அது வழிவகுக்கும்.
மிகசிறந்த முடிவை ஓபிஎஸ் எடுத்துள்ளார். எப்பொழுதுமே மூத்த அரசியல்வாதியின் ஆலோசனையை பெற்றதால்தான் மேலே செல்ல முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது. அவரது ஆலோசனையைப் பெற்று அதிரடி மாற்றங்கள் ஏற்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. மூத்த தலைவர்களை மதிக்க வேண்டும். ஆனால் அவர்களை குறை சொல்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அந்த வேலையை எடப்பாடி பழனிசாமி செய்து வருகின்றார். எம்ஜிஆரின் வாரிசு என்று பாராட்டப்பட பாக்யராஜ் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் யார் எது சொன்னாலும் ஏற்கமுடியாத நிலையில் உள்ளவர் பழனிசாமி. ஆனால் சிந்தித்து செயல்படுபவர் ஓபிஎஸ்'' என்றார்.