2021 ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் கடந்த நான்காம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு, வெப்பம், வலி, உடல் அழுத்தம் ஆகியவற்றைத் தொடாமல் உணரக்கூடிய கருவியைக் (சென்சார்) கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி 'சிக்கலான இயற்பியல் அமைப்புகளைப் புரிந்துகொள்வதில் அற்புதமான பங்களிப்பை அளித்ததற்காக' சியுகுரோ மனாபே, கிளாஸ் ஹாசல்மேன், ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் டபிள்யூசி மேக்மில்லனுக்கு ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று இந்தாண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. காலனித்துவத்தின் விளைவுகளையும், வளைகுடாவில் உள்ள அகதிகளின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கையை சமரசமின்றி பதிவு செய்தற்காக நாவலாசிரியர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு இந்த இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.