மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.
அதன்படி, விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இரண்டு நபருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்குப் பிறகு மைக்ரோ ஆர்.என்.ஏ. என்ற செல்லின் செயல்பாடு குறித்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்ட உள்ளது. அதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது.
மேலும் வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் எம். ஜம்பர் என 3 அறிஞர்கள் பெற உள்ளனர். புரதம் வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக மூவருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதோடு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டது. மனித வாழ்வின் நுட்பங்களை எடுத்துரைக்கும் கவிதைகளுக்காக ஹான் காங்கிற்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொட்ர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்பு அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக நோபல் பரிசு தேர்வு குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாரன் அசோமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோர் நோபல் பெற உள்ளனர். நிறுவனங்கள் எப்படி கட்டமைக்கப்படுகின்றன?. எவ்வாறு வளர்ச்சியை பாதிக்கக்கின்றன? என்ற ஆய்வுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.