குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் சுமார் ரூபாய் 13,000 கோடி கடன் பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நீரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது மத்திய அமலாக்கத்துறைக்குத் தெரியவந்தது. இதனையடுத்து இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நீரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த மார்ச் 19- ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் சுவிட்சர்லாந்தில் உள்ள நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடிக்கு சொந்தமான 4 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இவர்கள் வங்கிக் கணக்கில் இருந்த ரூபாய் 283.16 கோடியை சுவிட்சர்லாந்து அரசு முடக்கியது. மேலும், நீரவ் மோடியை இந்தியாவிற்குக் கொண்டுவர இந்தியா முயற்சி செய்து வந்தது. ஆனால் தான் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டால், தனக்குப் பாதுகாப்பு இல்லை என நீரவ் மோடி இங்கிலாந்து நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில், நீரவ் மோடியை நாடுகடத்த தடையில்லை என இங்கிலாந்து நீதிமன்றம் கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, "நீரவ் மோடியை இந்தியாவுக்கு ஒப்படைப்பது, மனித உரிமைகளுக்கு இணக்கமான ஒன்றுதான் என நான் திருப்தியடைகிறேன். நீரவ் மோடி ஒப்படைக்கப்பட்டால் நீதி கிடைக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் உள்ளன என்பதில் நான் மீண்டும் திருப்தி அடைகிறேன்" எனக் கூறியுள்ளார்.