இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் புதிய வரைபடத்தினை, ஐநா சபை உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்ப நேபாளம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லிபுலேக், கல்பான மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட சில பகுதிகளைத் தங்களது எல்லைக்குள் சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. நேபிலத்தின் இந்த செயலுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, இதன் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைபடத்தை இந்தியா உள்படப் பல நாடுகளுக்கும், ஐநா சபை போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு நேபாள அரசு விரைவில் அனுப்ப இருப்பதாக அந்நாட்டு அமைச்சர் பத்ம ஆர்யால் தெரிவித்துள்ளார்.. இம்மாத மத்தியில் இதற்கான பணிகள் முடிவடைந்து, நேபாளத்தின் புகைப்படங்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல அமைப்புகளுக்கு அனுப்பப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், கூகுள் உள்ளிட்ட இணைய சேவை நிறுவனங்களுக்கும் இந்த வரைபடத்தை அனுப்ப நேபாளம் முடிவு செய்துள்ளது.. இதன்மூலம் தங்களது நாட்டின் புதிய வரைபடத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என நேபாளம் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.