பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்த அம்ரித் பால் சிங் என்பவர் 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
கடந்த மாதம் பஞ்சாபின் ரூப்கர் மாவட்டம் சாம் கவுர் சாகிப் என்ற பகுதியைச் சேர்த்த பரிந்தர் சிங் என்பவரை கடத்திச் சென்று தாக்கியதாக அம்ரித் பால் சிங் உள்ளிட்ட மூவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரில் ஒருவரான லவ் ப்ரீத் சிங் என்பவரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து இருந்த போது லவ் ப்ரீத் சிங்கை மீட்பதற்காக அம்ரித் பால் சிங் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அஜினாலா காவல்நிலையத்திற்கு வாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் வந்து காவலர்களிடம் சண்டை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவலர்கள் லவ் ப்ரீத் சிங்கை விடுவிப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் லவ் ப்ரீத் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவித்துள்ளனர்.
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை அம்ரித் பால் சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை பஞ்சாப் போலீசார் கைது செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முயன்ற போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அம்ரித் பால் சிங்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே அம்ரித் பால் சிங் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இதனை எதிர்த்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்ட காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்திய தேசியக்கொடியை அகற்றிவிட்டு காலிஸ்தான் கொடியைப் பறக்கவிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பணியாற்றி வரும் இங்கிலாந்து தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டங்களைத் தெரிவித்தது. மேலும், இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதனையடுத்து லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிகப்பெரிய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இதே போன்று அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தேசியக்கொடி இறக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியா கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.