தமிழக மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
தமிழக ஆளுநர் அலுவலகத்தின் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி குறித்து செய்தி வெளியிட்டதற்காக ஆளுநர் அலுவலகத்தில் இருந்து புகார் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது அப்பட்டமான அதிகார வரம்பு மீறலாகும். ஆளுநர் அலுவலகத்திலிருந்து பத்திரிகையாளர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்படுவது இந்தியாவில் வேறெங்குமே நடந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு மிக மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது.
பல்கலைகழகத் துணைவேந்தர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாக ஆளுநர் கூறியிருந்தார். துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட ஆளுநரே அப்படி சொன்னது எல்லோருக்கும் வியப்பளித்தது. அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதை திசை திருப்புவதற்காகவே இப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருகிறதோ என்ற அய்யம் நமக்கு எழுகிறது.
தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு ஆளும் தரப்பினரால் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து நெருக்கடிகள் தரப்படுகின்றன. இதைப்பற்றி பிரதமரிடமே சென்று ஊடகவியலாளர்கள் முறையிட்டு உள்ளனர். இந்தச் சூழலில் பத்திரிக்கை சுதந்திரத்தை நெரிக்கும் செயலில் ஆளுநர் அலுவலகமே ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. இது கருத்துரிமைக்குப் பேராபத்தாகும். இதை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் குரலெழுப்ப முன்வரவேண்டும் என்று அழைக்கிறோம். திரு.நக்கீரன் கோபால் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.