மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் மக்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மியான்மர் இராணுவம் தாக்கியதில் இதுவரை 1,100 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 8000 பேர் காயமடைந்திருப்பதாகவும் மியான்மர் நாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஆங் சான் சூகி யை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த மியான்மரின் இராணுவ அரசு முடிவு செய்துள்ளது. இதனை ஆங் சான் சூகியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆங் சான் சூகி மீது நான்கு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாகவும், குற்றசாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் ஒவ்வொரு குற்றத்துக்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதியானால் 76 வயதான ஆங் சான் சூகி, தன் வாழ்நாளின் மீதிப்பகுதியை சிறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும். ஊழல் குற்றசாட்டுகளைத் தவிர மியான்மர் நாட்டின் இரகசிய சட்டத்தை மீறிய குற்றச்சாட்டும் ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.