மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.
இந்தச் சூழலில் வீட்டுக்காவலில் உள்ள ஆங் சான் சூகி மீது 11 வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதில் ஊழல் குற்றச்சாட்டுகள், தேசிய இரகசிய சட்டத்தை மீறுதல், கரோனா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
இந்தக் குற்றசாட்டுகள் மீதான விசாரணை, அந்த நாட்டு நீதிமன்றத்தில் அண்மைக்காலமாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் மியான்மார் நீதிமன்றம், இராணுவத்திற்கு எதிராக கருத்து வேறுபாடுகளைத் தூண்டியதற்காகவும், கரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காகவும் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.