குழியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற முயன்ற தாய் யானையின் இதயம் நின்றுவிட, கூச்சலிட்டே அக்கம்பக்கத்தினரை அழைத்த குட்டி யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குட்டி யானைகளின் விளையாட்டுகளையும், குறும்புகளையும் பார்ப்பதற்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் குறும்புத் தனத்தையும் தாண்டி குட்டி யானை ஒன்றின் செயல் நெகிழ்ச்சியில் தள்ளியுள்ளது . தாய்லாந்தில் சில நாட்களாவே கனமழை பொழிந்து வரும் நிலையில் கனமழையில் வழிதவறிய குட்டியானை ஒன்று சுமார் 5 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தவறி விழுந்தது. அப்பொழுது குட்டி யானையை காப்பாற்ற முயன்ற தாய் யானை பள்ளத்திற்குள் தலையை செலுத்தியது. அப்பொழுது தாய் யானையின் இதயம் நின்றுவிட்டது. பள்ளத்திற்குள் உடலை செலுத்தியவாறே தாய் யானை ஸ்தம்பித்து நின்றது. உடனே தாய்க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை உணர்ந்த குட்டியானை ''எங்க அம்மாவை காப்பாத்துங்க'' என்ற உணர்வுடன் பீறிட்டு தனது குட்டி குரலில் பிளிறியது.
சத்தம் கேட்டு உடனே சம்பவ இடத்திற்கு வந்த மக்கள் தாய் யானையை பள்ளத்தில் இருந்து கிரேன் உதவியுடன் வெளியே கொண்டுவந்தனர். ஒருபுறம் குட்டி யானையின் கதறல், மறுபுறம் இதய துடிப்பில்லாமல் வீழ்த்துகிடக்கும் தாய் யானை என சம்பவ இடமே பரபரப்பானது. அங்கு வந்திருந்த பெண் ஒருவர் இந்த காட்சிகளை கண்டு கண்ணீர் விட்டபடியே தாய் யானையின் இதயம் இருக்கும் பகுதியை ஓங்கி குத்தி தாய் யானையின் இதயத்தை செயல்பட வைக்க முயற்சித்தார். தொடர் முயற்சியின் பலனாக தாய் யானை எழுந்து நின்றது. மறுபுறம் மீட்கப்பட்ட குட்டி யானையும் தாய் யானையிடம் ஓடி ஒட்டிக்கொண்டது. அங்கிருந்தோர்களின் கண்களில் இருந்த கண்ணீரும் ஏராளம். அந்த இளம்பெண் கண்ணீரை அடக்கமுடியாமல் அழுதார்.
தற்பொழுது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் தமிழகத்தில் கூட குட்டி யானை ஒன்று கூட தாய் சேருவதற்காக வனத்துறையினருடன் குட்டி நடைபோட்டது வைரலானது குறிப்பிடத்தக்கது.