அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றபோது முகக்கவசம் அணிய மறுத்தது சர்ச்சையாகியுள்ளது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,19,240 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,28,194 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 10,00,101 ஆகவும் உள்ளது. இந்த வைரஸ் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் 10.6 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 61,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் கரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் அலட்சியம் காட்டுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றபோது முகக்கவசம் அணிய மறுத்தது சர்ச்சையாகியுள்ளது.
மினசோட்டா மாகாணத்தில் உள்ள மேயோ மருத்துவமனைக்குச் சென்று துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது மருத்துவமனைக்குள் வந்ததும், அங்குள்ள மருத்துவர்கள் மைக் பென்ஸிடம் முகக்கவசம் அணியுமாறு கூறியுள்ளனர். ஆனால் மருத்துவர்களின் அறிவுறுத்தலை அலட்சியப்படுத்திய அவர், முகக்கவசம் அணியாமலேயே மருத்துவமனையைப் பார்வையிட்டுள்ளார். துணை அதிபரின் இந்த அலட்சியமான செயல் குறித்து மருத்துவமனை நிர்வாகம் ட்விட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட்டது. ஆனால் இந்த ட்வீட் சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது. நாட்டின் துணை அதிபரானாக இருக்கும் ஒருவர், அவசரக்காலத்தில் அடிப்படை இவ்விதிமுறைகளைக்கூடப் பின்பற்றாமல் நடந்துகொண்டது தவறு எனக் கருத்துகள் எழுந்து வருகின்றன.
ஆனால் இதுகுறித்து விளக்கமளித்து மைக் பென்ஸ், "அமெரிக்காவின் துணை அதிபர் என்ற முறையில் நான் வழக்கமான அடிப்படையில் தொடர்ந்து கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்பட்டு வருகிறேன். என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் கரோனா வைரஸுக்கு சோதனை செய்யப்படுகிறது. எனவே முகக்கவசம் அணியாதது சிக்கலை ஏற்படுத்தாது" எனத் தெரிவித்துள்ளார்.