மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருபவர் சத்யா நாதெல்லா. இந்தநிலையில், இவர் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழு, ஒருமனதாக சத்யா நாதெல்லாவை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
இதன்மூலம் சத்யா நாதெல்லா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் மூன்றாவது நபர் என்ற பெருமையைப் பெறுகிறார். இதற்கு முன்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அதன்பிறகு ஜான் தாம்சன் என்பவரும் மட்டுமே நிறுவனத்தின் தலைவர் பதவியை வகித்துள்ளனர்.
சத்யா நாதெல்லாவிற்கு முன்பு தலைவர் பதவியை வகித்த ஜான் தாம்சன், தலைமை சுயாதீன இயக்குநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மைக்ரோசாஃப்ட் இயக்குநர் குழுவில் இருந்து பில்கேட்ஸ் விலகிய பிறகு, நிறுவனத்தின் தலைமையில் நடந்த பெரிய மாற்றம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.