மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லாவின் மகன் செயின் நாதெல்லா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 26 வயதான செயின் நாதெல்லா பிறப்பிலிருந்தே முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுவயது முதலே இதற்காக அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த சூழலில் திங்கட்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்.
செயின் நாதெல்லா மறைவு குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது நிர்வாக ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "செயின் மறைந்துவிட்டார். ஊழியர்கள் சத்ய நாதெல்லா மற்றும் அவரது குடும்பத்தாரை தங்கள் நினைவில் வைத்து பிரார்த்தனை செய்து, அவர்களுக்கு தனிமையில் இருக்க உதவுங்கள்," எனத் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சத்ய நாதெல்லா கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2014 இல் தலைமை நிர்வாக அதிகாரியாக சத்ய நாதெல்லா பொறுப்பேற்றதிலிருந்து, மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறந்த சேவை வழங்குவதற்காக பல தயாரிப்புகளை வடிவமைப்பதில் அந்நிறுவனம் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. செயின் நாதெல்லா மறைவைத் தொடர்ந்து சத்ய நாதெல்லாவுக்கும் அவரது மனைவி அனுபமாவிற்கும் மக்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.