பேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான். இனி அவ்வாறு நடக்காது என மார்க் ஜூக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இனி இந்தியா, பிரேசில் உள்ளிட்ட எந்த நாட்டு தேர்தலுக்கும் பேஸ்புக் உதவாது என்றும் கூறியுள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரச்சார நிறுவனம், பேஸ்புக் தகவல்களை திருடி பல நாடுகளின் தேர்தலுக்கு உபயோகப்படுத்தியதாக சேனல் 4 தொலைக்காட்சி செய்தி நிறுவனம் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டன. மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "இந்திய தேர்தலில் பேஸ்புக் தலையிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார். இந்த முறைகேட்டில் காங்கிரஸிற்கும் தொடர்பு இருக்கிறது என பா.ஜ.க. குற்றம் சாட்டியது.
இதைத்தொடர்ந்து மார்க் சிஎன்என், மற்றும் நியூயார்க் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில், இனி எந்த நாட்டு தேர்தலிலும் பேஸ்புக் தலையிடாது என்றும், இனி பேஸ்புக் தகவல் கசியாத வண்ணம் பல கட்டமாக மேம்படுத்தப்படும் என்றும், புதிய ஏ.ஐ. (AI) ரோபோக்கள் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதற்காக பல தொழில்நுட்ப பணியாளர்கள் உழைத்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.