இலங்கையில் அடையாள எண்களின் அடிப்படையில் மக்கள் தினமும் வெளியே செல்ல அனுமதிக்கும் வகையில் ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த மார்ச் 20 முதல் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், மக்கள் வெளியே செல்வதும் தடுக்கப்பட்டது. சுமார் 50 நாட்கள் ஊரடங்கால் அந்நாட்டில் கரோனா பரவல் பெருமளவு குறைக்கப்பட்டது. இதன் விளைவாக அந்நாட்டில் 869 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒன்பது பேர் மட்டுமே உயிரிழந்தனர். இந்நிலையில், கரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து அந்நாட்டு அரசு நேற்று முதல் ஊரடங்கைத் தளர்த்தியுள்ளது. பெரும்பலான கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க அரசாங்கத்தினால் அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையிலுள்ள இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டையில் இறுதி இலக்கம் ஒன்று அல்லது இரண்டாக இருப்பின், அவர்களுக்குத் திங்கட்கிழமையும், மூன்று அல்லது நான்காக இருப்பின் அவர்களுக்குச் செவ்வாய்க்கிழமையும் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும். அதேபோன்று ஐந்து அல்லது ஆறு என்ற இறுதி இலக்கங்களைக் கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்குப் புதன்கிழமையும், ஏழு அல்லது எட்டு என்ற இறுதி இலக்கங்களை கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு வியாழக்கிழமையும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது அல்லது பூஜ்யம் ஆகியவற்றை இறுதி இலக்கமாகக் கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு வெள்ளிக்கிழமை வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட எண்களை உடையவர்கள் அதற்காகக் குறிப்பிடப்பட்ட நாட்களில் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.