அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். 'ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம்; கத்தை குச்சியை முறிப்பது கடினம். இனியும் தாமதம் சொல்லி தோல்விக்குத் தொண்டர்களைப் பழக்குவது பாவ காரியம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றாக வேண்டும். கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் தயாராகுவோம்' என அண்மையில் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அடுத்த நாளே செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, 'எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற முன்னாள் தலைவர்களை விமர்சித்தவருடன் தேர்தல் கூட்டணி வைக்கும் ஓபிஎஸ் அதிமுக ஒன்றிணைவது குறித்து பேசத் தகுதியற்றவர். அவர் அறிவுரை சொல்லத் தேவையில்லை' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்த புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தங்களுடைய ஆதரவை விலக்கிக் கொண்டு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற புதிய குழுவை உருவாக்கி உள்ளனர். இந்த குழுவின் சார்பில் வ.புகழேந்தி தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ;ஜெயலலிதா மறைவுக்குப் பின்னும் ஒற்றுமை ஏற்பட்டு மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. மறப்போம் மன்னிப்போம் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒன்றுபட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைவதே அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. அதிமுக ஒற்றுமை வேண்டி நான்கு பேரையும் சந்திக்க விரும்புகிறோம். ஆலோசனைகள் கருதிப் பகிர நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.