கடந்த வாரம் இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் தற்போது அந்த அமைப்பின் தலைவன் பாக்தாதி பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு விடியோவும் வெளியிடாமல் இருந்த பாக்தாதி தற்போது இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளான். 2014 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட பாக்தாதி அதற்கு பின் வெளியிடும் முதல் வீடியோ இது என்பது குறிப்பிடத்தக்கது.
வயதான தோற்றத்தில் பாக்தாதி 18 நிமிடங்கள் பேசும் இந்த வீடியோவில், "எங்கள் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழியாக அடுத்தடுத்து தாக்குதல்கள் தொடுக்கப்படும். உண்மையில், இஸ்லாத்தும், அதன் மக்களுக்கும் தொடங்கியுள்ள இந்த போர் நீண்ட நாட்களுக்கு தொடரும். சிரியாவில் போர் முடிந்துவிட்டது. ஆனால், அங்கு முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சிலரின் செயல்கள் அவர்களின் மூர்க்ககுணத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையும் காட்டிவிட்டது. அதற்கு பதிலடியாக நாம் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தாக்குதல் நடத்தினோம். மேலும் மாலி, சூடான், அல்ஜீரியா ஆகிய நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் பேச்சு நடத்தி, ஜிகாதி தான் உண்மையான தீர்வு என்று புரியவைக்கப்பட்டு அங்கும் போர் நடத்தப்படும். அடுத்தடுத்து தாக்குதல்கள் தொடரும்" என தெரிவித்துள்ளான்.