Skip to main content

கொரியா தமிழ்ச்சங்க பொங்கல் விழா- நக்கீரன் ஆசிரியர், வைகோ ஆகியோர் வாழ்த்து!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

கொரியா தமிழ்ச்சங்கம் சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவுக்கு நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நக்கீரன் கோபால்

 

 Korea Tamil Pongal Festival - Nakkeeran editor and Vaiko congratulate!


கடந்த நான்கு வருடமாக கொரிய தமிழ்ச்சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி உலகத் தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரத்தையும் பெற்று அனைவரும் பார்த்து வியக்கும் அளவிற்கு இந்த சங்கத்தை நடத்திக்கொண்டிருக்கும் தலைவர் முனைவர். இராமசுந்தரம் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நக்கீரனின் வாழ்த்துக்கள். மேலை நாடுகள் அனைத்திலும் தமிழ் சங்கங்கள் இருந்தாலும் நமது கொரிய தமிழ்ச்சங்கமானது மிகப்பெரிய தனித்துவத்தை பெற்றுள்ளது. நான் அறிந்தவரையில் விஞ்ஞானிகள் பெரும்பாலும் ஒன்றுபட்டு கொரிய தமிழ்ச்சங்கத்தை நிறுவியது தனிப்பெரும் சிறப்பாகும்.
 

தமிழ்நாட்டில் தமிழை பாதுகாக்க மிகவும் சிரமப்படும் அதேவேளையில் அயல்நாடுகளில் தமிழ் சங்கங்கள் நெருங்கி வருவது மிகவும் போற்றுதலுக்கு உரியதாகும். நமது தமிழ் மொழியை ஒரு சிலர் ஒடுக்க நினைத்தாலும் கீழடி போன்ற இடங்களில் கிடைக்கபெற்ற சான்றுகளின் மூலம் தமிழ் உலகின் மூத்த மொழி என்பதை நிரூபித்து வருகிறது. இதுபோன்று தமிழ் மொழியை மென்மேலும் உலகறியச் செய்ய அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் நம் மொழியை தாங்கிச் செல்வது எங்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. குறிப்பாக கொரிய தமிழ்ச்சங்கம் இது போன்றதொரு நிகழ்வினை கொண்டாடும் விதம் மிகவும் சிறப்புமிக்கது. நம் இனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் குறிப்பாக தமிழர்கள் அந்நாட்டில் வாழும் கொரிய மக்களின் பங்களிப்பும் இருக்கிறது என்று எண்ணும் போது உங்களை நினைத்து தமிழகமே தலைவணங்கும் என்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நக்கீரன் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
 

 Korea Tamil Pongal Festival - Nakkeeran editor and Vaiko congratulate!


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் சார்பில் பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தென்கொரியா நாட்டில் வாழ்கிற தமிழர்களும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்று குறிப்பிட்டிருக்கிறார்.



ஒரிசா பாலு

 

 Korea Tamil Pongal Festival - Nakkeeran editor and Vaiko congratulate!


1987 முதல் எனக்கும் கொரியாவிற்குமான உறவு தொடர்கிறது. 1905-ம் ஆண்டிலேயே கொரிய மொழி அறிஞர் கெல்மர் கோபர்ட் கொரிய-தமிழ் மொழி தொடர்பு குறித்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதன்பின் 1980-களில் கிளிப்பிங்கர் என்பவர் கொரிய-தமிழ் மொழியிலுள்ள ஒத்த சொற்களை குறித்து புத்தகம் வெளியிட்டார். கொரிய மக்களின் இசை, வழிபாடு, விழாக்கள் மற்றும் உணவு ஆகிய அனைத்திலும் தமிழர் தொடர்பு இருக்கிறது. குடுமி, குமாரி ஆசான் குமி போன்ற பல தமிழ் பெயர்கள் கொண்ட ஊர்களும் அங்கு இருக்கிறது. சிறப்பாக பணியாற்றும் கொரிய தமிழ்ச் சங்க தலைவர் இரமசுந்தரமும் உடனிருந்து உதவி செய்யும் ஆரோக்கியராஜும் அனைத்து உறுப்பினர்களும் கொரிய-தமிழ் உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

ஆதனூர் சோழன்
 

 Korea Tamil Pongal Festival - Nakkeeran editor and Vaiko congratulate!


கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். கொரிய தமிழ்ச் சங்க நிகழ்வுகள் தொடர்பாக நக்கீரன் இதழில் பலமுறை செய்திகள் வெளியிட்டுள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளாக கொரிய தமிழ்ச் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நண்பர்களின் வாயிலாக அறியப் பெற்றேன். இந்த மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் கொரிய தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொரிய தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தலைவர் முனைவர். இராமசுந்தரம், துணைத் தலைவர் கேத்தரின் கிருஸ்டி, செயலாளர் முனைவர். இராமன், துணைச் செயலாளர் முனைவர். ஆரோக்கியராஜ் போன்றவர்கள் மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.
 

நான் கடந்த ஆண்டு கொரியாவின் கதை என்று ஒரு தொடரை நக்கீரன் இணையதளத்தில் எழுதி இருந்தேன். இந்தத் தொடர்தான் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கும் எனக்கும் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆகவே தமிழ்தான் என்னை உங்களோடு இணைத்து இருக்கிறது என்பதில் பெருமை அடைகிறேன். உலக நாடுகள் அனைத்திலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழர் கோட்பாடுகளை பின்பற்றி உலக மக்களோடு இணைந்து வாழ்வது போற்றுதலுக்கு உரியது.
 

சமீபத்தில் தமிழக அரசு கொரிய அரசோடு இணைந்து கொரிய மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த புத்தகத்தில் உள்ள விளக்க உரையை கொரிய மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிடப்படுவது மட்டுமல்லாமல் தமிழ்-ஆங்கிலம்-கொரியன் மொழியில் திருக்குறள் ஆண்ட்ராய்டு செயலியையும் வெளியிட இருப்பது வரலாற்று சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்ட்ராய்டு செயலியை பொறியாளர். ஜனகராஜ் போன்றவர்கள் மிகச் சிறப்பாக உருவாக்கி இருப்பதாக நண்பர் இராமசுந்தரம் தெரிவித்தார். விரைவில் இந்த ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட படுவதாகவும் இந்த முயற்சியை அலுவலகரீதியாக முன்னெடுக்க தென்கொரிய உள்ள இந்திய தூதரகம் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுபோன்றதொரு நடவடிக்கைகளில் கொரியா தமிழ்ச்சங்கம் ஈடுபடும்போது அந்த சங்கத்தின் மீதான மதிப்பு மென்மேலும் உயர்வது மட்டுமல்லாமல் சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்கு இரண்டு நாடுகளின் அரசுகளும் ஊக்கமளிக்கும் என்பது உறுதி.

ஜேம்ஸ் வசந்தன்

 

 Korea Tamil Pongal Festival - Nakkeeran editor and Vaiko congratulate!


இன்றைய தலைமுறைகள் பன்மொழி கற்பித்தலுக்கு உட்படுத்தப் பட்டிருந்தாலும் இளைஞர்களும் மாணவர்களும் தமிழ் கற்பித்தலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது மிகப் பெரிய கடமையாகும்.  மெரினா புரட்சி இளைஞர்களால் தமிழ்மொழி என்றென்றும் வளர்ந்து கொண்டே செல்லும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. பல்வேறு நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பித்து நம்முடைய தாய் மொழியை கற்பிக்கப்பட்டு கல்லூரி அளவிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது போல் உங்கள் அனைவரின் முயற்சியில் தென்கொரியாவில் இது போன்றதொரு கல்வி நிறுவனங்கள் தமிழுக்காக அமையப் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இந்த நிகழ்வுகள் உடனே நடப்பது சாத்தியமில்லை என்றாலும் வரும் காலங்களில் நாம் அனைவரும் இந்த இலக்கை நோக்கி நகர வேண்டும். இதன் அடித்தளமாக கொரிய தமிழ் சங்கம் நிறுவப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.


நர்த்தகி நடராஜ்

 

 Korea Tamil Pongal Festival - Nakkeeran editor and Vaiko congratulate!


தாய்நாட்டை விட்டு வெளியில் இருக்கும் அணைத்து தமிழர்களுக்கும் தமிழிசை நாட்டியக்கலைஞரான நர்த்தகி நடராஜின் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள். வெளிநாட்டில் இருந்தாலும் தமிழ் பண்பாடு  மறவாமல் நமது அடையாள திருநாளை நீங்கள் அனைவரும் முன்னெடுப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதற்காக ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் அவர்களையும் மற்றும் அமைப்பாளர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். சனவரி 26 அன்று நடைபெற இருக்கும் கொரிய பொங்கல் விழாவில் என்னால் நேரடியாக கலந்துகொள்ள முடியாவிட்டாலும் என்னுடைய மனம் உங்களோடு இணைத்திருக்கும்.  தற்பொழுது கீழடி அகழாய்வு தமிழர் அனைவருக்கும் புதிய உயிர்ப்பை கொடுத்திருக்கிறது..

பத்மஸ்ரீ வாசுதேவன்

 

 Korea Tamil Pongal Festival - Nakkeeran editor and Vaiko congratulate!


மனிதன் மனிதனுக்கே கொடுத்ததுதான் திருக்குறள். அத்தகைய குறளை நமது வாழ்க்கையில் வழித்துணையாக கொள்ள வேண்டும். கொரிய தமிழ்ச் சங்கம் திருக்குறளின் ஒவ்வொரு பகுதியை மக்கள் அறியும் வகையில் கொண்டு செல்ல வேண்டும். நாம் ஒவ்வொருநாளும் எழுந்தவுடன் ஒரு திருக்குறளை சொல்லி அதன்படி வாழ்ந்தாலே நாம் வாழ்வில் முன்னேறலாம். நாம் முன்னேறினால் இந்த நாடு முன்னேறும். நாடு முன்னேறினால் உலகம் முன்னேறும். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் வாழ்க்கை அழகானது அதனை வெற்றிகரமானதாக்கு என்பார்கள். அதற்கான வழிகாட்டிதான் திருக்குறள் என்று தனது வாழ்த்துச் செய்தியில் வாசுதேவன் குறிப்பிட்டார். முன்னதாக, தமக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்க காரணமாக இருந்தது பிளாஸ்டிக் தார்ச்சாலை தொழில்நுட்பத்தை களத்தில் பயன்படுத்த தேவையான படிநிலையை உருவாக்கிய தன்னுடைய மாணவர் சுப்பிரமணியன் ராமசுந்தரம் என்பதை தெரிவித்தார். தனது மாணவரின் பங்களிப்பை பெருந்தன்மையுடன் அவர் வெளிப்படுத்தியவுடன் பங்கேற்ற அனைவரும் கையொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 



 

சார்ந்த செய்திகள்