தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய தமிழர்களின் அறிவுக் களஞ்சியமான திருக்குறள் உலகப்பொதுமறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உலகில் விவிலியம் மற்றும் குர்ஆனுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 29 செப்டம்பர் 2015 அன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் திருக்குறளை கொரிய மொழியில் கொண்டு வருவது என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி திருக்குறளின் கொரிய மொழி வடிவத்தை சென்னையிலுள்ள கொரிய துணைத்துத்தரகத்தின் கன்சுலார் ஜெனரல் கியோங் தி கிம் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
இந்த செய்தியையும், கடந்த மாதம் சியோலில் கொரிய தமிழ்ச்சங்கம் கோ மற்றும் லீ கல்வியகத்துடன் இணைந்து நடத்திய தமிழ்-கொரிய மொழி மற்றும் பண்பாட்டு ஒற்றுமைகளின் இன்றியமையாமை குறித்த கருத்தரங்கில் கொரியா மக்கள் திருக்குறளின்பால் வெளிப்படுத்திய ஈடுபாட்டையும் மதிப்பிற்குரிய இந்திய தூதரகத்திற்கு கொரிய தமிழ்ச்சங்கம் கடிதம் மூலம் தெரிவித்தது.
கொரிய தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து ஏற்றுக்கொண்ட கொரியாவுக்கான இந்தியத்தூதர் ஸ்ரீபிரியா ரங்கநாதன் கொரியா தமிழ்ச்சங்கத்தின் ஆளுமைக்குழுவை தூதரகத்தின் பிரநிதிநிதிகளை சந்தித்து நேரடியாக விளக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.
தமிழக அரசால் வெளியிடப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் கொரிய வடிவத்தை இங்கு கொரியாவில் முறைப்படி வெளியிடுவதற்கு நமது கொரிய தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் மதிப்பிற்குரிய இந்திய தூதரகம் முன் வந்திருப்பதாக அந்தப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கொரிய தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தலைவர் முனைவர் இராமசுந்தரம், இணைச்செயலர் பேராசிரியர் செ.ஆரோக்கியராஜ் மற்றும் தமிழ்-கொரிய-ஆங்கில திருக்குறள் ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கும் தமிழ்ச்சங்க குழுவின் முதன்மை பொறுப்பாளர் வே.ஜனகராஜ் ஆகியோர் இந்திய தூதரகம் சென்று துணைத்தூதர். சதிஷ் சிவன், கான்சுலார் சேரிங் அங்குக் மற்றும் தூதரகத்தின் ஒரு அங்கமான இந்திய கலாச்சார நடுவத்தின் இயக்குனர் முனைவர் சோனி திரிவேதி ஆகியோர் கொண்ட குழுவிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டு வேண்டுகோள்களை முன்வைத்தனர். துணைத்தூதர் கொரிய மொழியிலான திருக்குறள் புத்தகத்தை இங்கு வெளியிட ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னையிலிருந்து பெறப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் கொரியா வடிவத்தை கொரியா தமிழ்சங்கத்தின் ஆளுமைக்குழுவினர் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பிரபல கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன அயல்நாட்டு தமிழர் புலத்தின் பேராசிரியர் ஜானகி, மற்றும் இந்திய தூதரகத்தின் தொழில்துறை செயலாளர் சோஸ் அண்ட்ரோ ஹெல்த்தா ஆகியோர் உதவியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.