ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த உணவு திருவிழா ஒன்றில் கேரளாவை சேர்ந்தவர்கள் அமைத்திருந்த உணவு பிரிவில் மாட்டுக்கறி விற்கப்பட்டதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 31 ஆம் தேதி ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் கேரளா சமாஜம் சார்பாக அமைக்கப்பட்டிருந்த உணவு பிரிவில் மாட்டுக்கறி விற்பனை செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த ஒரு சிலர், மாட்டுக்கறி விற்பனை செய்யக்கூடாது, அது இந்து மதத்திற்கு எதிரானது என அங்கு இருந்த கேரளாவினரிடம் கூறியுள்ளனர். மேலும் அந்த ஸ்டாலை உடனடியாக மூடவும் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையயடுத்து அங்கு வந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாட்டுக்கறி இல்லாத உணவுவகைகளை மட்டுமே மெனுவில் வைக்குமாறும், அப்படி இருந்தால் மட்டுமே பிரச்சனை இன்றி விழாவை முன்னெடுக்க முடியும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை ஏற்ற கேரளா சமாஜ், பீஃப் உணவுகளை மெனுவில் இருந்து எடுத்துள்ளது. இதன்பின் அந்த விழா நடந்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தின் மக்களின் பிடித்தமான உணவு வகைகளை வெளிக்கொணரும் விதமாக நடத்தப்பட்ட இந்த உணவு திருவிழாவில் கேரளாவின் பிரபல உணவான மாட்டுக்கறியை வைத்தோம். ஆனால் அங்கு ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளால் விழா ஏற்பாட்டாளர்கள் மெனுவை மாற்றக்கூறியதால் மாற்றினோம். இதனை யாரும் பெரிய சர்ச்சையாக ஆக்க வேண்டாம் என கேரளா சமாஜ் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை எதிரித்து ஜெர்மனியில் கேரளாவினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது.