ஜூன் மாதத்தில் நிமோனியாவால் 600க்கும் மேற்பட்டோர் இறந்ததை அடுத்து மத்திய ஆசிய நாடு முழுவதும் அறியப்படாத 'நிமோனியா' பரவுவதாக கஜகஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது. இதன் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், கரோனாவை விடக் கொடிய நிமோனியா ஒன்று மத்திய ஆசிய நாடுகளில் பரவி வருவதாகச் சீனா எச்சரித்துள்ளது. கஜகஸ்தானில் இந்த "அறியப்படாத நிமோனியா" காரணமாகக் கடந்த ஆறு மாதங்களில் சீனக் குடிமக்கள் உட்பட 1,772 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஜூன் மாதத்தில் மட்டும் 628 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கரோனாவை விட இறப்பு வீதம் அதிகமாக இருக்கும் இந்த நிமோனியாவில் இருந்து சீன மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கஜகஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், சீன அரசு ஊடகங்களின்படி, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என்று கஜகஸ்தானின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மறுத்துள்ள கஜகஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர், சீன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை "உண்மை அல்ல" என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட கஜகஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம், "வகைப்படுத்தப்படாத நிமோனியா" இருப்பதை ஒப்புக் கொள்வதாகவும், ஆனால் சீனத் தூதரகம் வழங்கிய எச்சரிக்கை உண்மைக்கு மாறாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.