
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதன் மூலம் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வென்றுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கமலா ஹாரிஸ், "நம்பிக்கையுடன் அமெரிக்கா வந்த எனது தாயை இந்த வெற்றி தருணத்தில் நினைவு கூர்கிறேன். கணவர் உட்பட குடும்பத்தினர் அனைவரின் அன்புக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க நாட்டு மக்களுக்கு நன்றி. ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல; அது செயல்; நாட்டு மக்கள் மீது ஜோ பைடன் வைத்திருக்கும் அளவில்லாத அன்பே, தனது வெற்றிக்கு காரணம். கடந்த நான்கு ஆண்டுகளாக சமத்துவம் மற்றும் சம உரிமைக்காக நாம் அனைவரும் போராடி வந்தோம்.
நூறாண்டுகளில் போராடிய அனைத்து பெண்களையும் நினைவு கூறுகிறேன். கனவுகள் சாத்தியமாவதற்கு எனது வெற்றியே இளம் தலைமுறைக்கு உதாரணம். பைடனுக்கு வாக்களித்ததன் மூலம் நம்பிக்கை, ஒற்றுமை, கண்ணியம், உண்மைக்கு வாக்களித்துள்ளீர்கள். யாருக்கு வாக்களித்திருந்தாலும் அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் உழைப்பேன். துணை அதிபராகியுள்ள முதல் பெண்ணாக நான் இருக்கலாம்; ஆனால் நான் கடைசி பெண்ணல்ல. நமது நாட்டின் பெண்களுக்கு நிறைய சாத்தியங்கள் உருவாக காத்திருக்கின்றன.வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய அமெரிக்க மக்களுக்கு நன்றி." இவ்வாறு கமலா ஹாரிஸ் உரையாற்றினார்.