Skip to main content

"இறையாண்மையை மீறும் செயல்.. போரில் ஈடுபட்டால் அது..' - ரஷ்யா குறித்து பைடன் பரபரப்பு பேச்சு!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

joe biden

 

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதேபோல் 100 பேர் கொண்ட செனட் சபைக்குப் புதிதாக 34 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தநிலையில், இந்த தேர்தலில் ரஷ்யா இடையூறை ஏற்படுத்த முயலுவதாக ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

தேசிய உளவுத்துறை இயக்குநரின் அலுவலகத்தில் இதுதொடர்பாக பேசிய ஜோ பைடன், "2022 தேர்தல் தொடர்பாகவும், தவறான தகவல்களைப் பரப்புவது தொடர்பாகவும் ரஷ்யா ஏற்கனவே என்ன செய்துவருகிறது என்று பாருங்கள். இது நமது இறையாண்மையை முற்றிலும் மீறுவதாகும்" என கூறியுள்ளார். தங்கள் நாட்டு தேர்தல்களில் ரஷ்யா தலையிடுவதாக அமெரிக்க நீண்டகாலமாக குற்றஞ்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்ந்து ஜோ பைடன், தனது பேச்சின்போது ரஷ்ய அதிபர் புதினையும் விமர்சித்தார். இதுதொடர்பாக அவர், "புதினுக்கு ஒரு உண்மையான பிரச்சனை உள்ளது. அவர் அணு ஆயுதங்களைக் கொண்ட பொருளாதாரத்தின் மேல் அமர்ந்திருக்கிறார். அதுதான் அந்தப் பிரச்சனை. வேறு ஒன்றும் இல்லை. தான் ஒரு உண்மையான சிக்கலில் இருப்பதை அவர் அறிவார். இது எனது பார்வையில் அவரை இன்னும் ஆபத்தானவராக ஆக்குகிறது." என கூறியுள்ளார்.

 

மேலும் ஜோ பைடன், "நாம் பெரிய சக்தியுடன் போரில் ஈடுபட்டால், அது இணைய மீறலின் விளைவாகத்தான் இருக்கும்" என தெரிவித்தார். அமெரிக்கா, கடந்த மார்ச் மாதம் மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச்சில் நடந்த ஹேக்கிங் தொடர்பாக ரஷ்யாவை குற்றஞ்சாட்டிவருகிறது. மேலும், ரஷ்யாவிலிருந்து நடத்தப்படும் இணைய தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்யாவை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்