ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி 20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இந்த மாநாட்டை நடத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றது.
அதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்டோர் டெல்லியில், நடைபெறும் உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பங்கேற்கவில்லை என்றும் இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக விளக்கமளித்துள்ளார் என்றும் தகவல் வெளியானது. அவருக்குப் பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ் ரோவ் பங்கேற்க இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைமையில் சுமார் 25 க்கும் மேற்பட்ட அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்த நிலையில், சமீப காலமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை சம்பந்தமாக உரசல்கள் இருந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் நடந்த ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட சில தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சத்தித்து இது குறித்து உரையாடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக சீன வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், “பிரதமர் மோடி வேண்டுகோளின் பேரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது அதிபர் ஷி ஜின்பிங் மோடியுடன் பேசினார்” என்று தெரிவித்திருந்தது. அதே போல், இந்திய அதிகாரிகள் தரப்பிலும் தகவல்கள் வந்தன.
இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பகுதியாக அறிவித்து உரிமை கொண்டாடி சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த நிலையில், உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்பதை அந்த நாட்டு அரசு இதுவரை உறுதி செய்யவில்லை. எனவே, அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் ‘சீன அதிபர் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறீர்களா?’ என்று செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் கலந்துகொள்வார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.