Skip to main content

உச்சத்தில் போர் பதற்றம்: ”உக்ரைனிலிருந்து வெளியேறுங்கள்” - அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் அறிவுறுத்தல்!

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

JOE BIDEN

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைன் மீது படையெடுக்கும் என கருதப்படுகிறது. ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை எனக் கூறி வருகிறது. ஆனால் இதனை நம்பாத அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும், போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன. அமெரிக்கா தனது படைகளையும் கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது.

 

இதற்கிடையே ரஷ்யா உக்ரைன் எல்லையில் குவித்துள்ள படைகளைத் திரும்ப பெற, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணி விரிவுபடுத்தப்படுவது தவிர்க்கப்படும், நேட்டோவில் உக்ரைன் சேர்க்கப்படாது என்பது போன்ற உத்தரவாதங்களை வலியுறுத்தியது. ஆனால் அதனை ஏற்க மறுத்த அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும்  பதற்றத்தை குறைப்பது தொடர்பாக வேறு சில முன்மொழிவுகளை ரஷ்யாவிடம் முன்வைத்தன.

 

ஆனால், ”அமெரிக்கா மற்றும் நேட்டோவின் முன்மொழிவுகளை கிரெம்ளின் ஆராய்ந்து வருகிறது. ஆனால் அந்த முன்மொழிவுகள் போதுமானதாக இல்லை. ரஷ்யாவின் அடிப்படையான கவலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பது ஏற்கனவே தெளிவாக தெரிகிறது. வாஷிங்டனின் முதன்மையான அக்கறை உக்ரைனின் பாதுகாப்பில் இல்லை. அதன் முதன்மையான அக்கறை ரஷ்யாவை கட்டுப்படுத்துவதில் உள்ளது” என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். இதனால் எந்தநேரமும் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. 

 

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனிலிருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஊடக நேர்காணலில் இது தொடர்பாக அவர், ”அமெரிக்க குடிமக்கள் உக்ரைனிலிருந்து இப்போதே வெளியேற வேண்டும். நாம் உலகின் மிகப்பெரிய படைகளில் ஒன்றைக் கையாண்டு வருகிறோம் . இது மிகவும் வித்தியாசமான சூழ்நிலை. நிலைமை விரைவில் ஆபத்தானதாக மாறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் எந்தசூழ்நிலையிலும் உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது எனவும், அவ்வாறு அனுப்பினால் அது உலகப்போரில் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ள ஜோ பைடன், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ள தொடங்கினால் நாம் வேறு உலகில் இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

போர் எற்பட்டால், உக்ரைனில் உள்ள குடிமக்களை அமெரிக்கா மீட்குமா என்பது குறித்த கேள்விக்கு, அவர்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள் என ஜோ பைடன் கேள்வியெழுப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்