பல பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் மற்றும் சிறப்பான கட்டிடங்களை கொண்டது இத்தாலியின் ரோம் நகரம். பண்டைய கால கட்டிடக்கலை, நாகரிகங்கள் குறித்து ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் செல்லும் இடங்களில் ரோம் நகரமும் ஒன்று.
ஆனால் சமீபகாலங்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வரும் நிலையில், புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் பல புதிய விதிகளை அமல்படுத்தி வருகிறது அந்நாட்டு அரசு. அதன்படி ஸ்பானிஷ் படிக்கட்டுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட பழமை வாய்ந்த ஒரு சில இடங்களில் சுற்றுலா பயணிகள் அமரவோ, அல்லது கூடாரமிடவோ தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. ஸ்பானிஷ் படிக்கட்டுகளில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் யாரும் புகைப்படங்கள் எடுக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி சிறப்பு சுற்றுலா பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்பானிஷ் படிகளில் அமரும் சுற்றுலா பயணிகளை அவர்கள் விசில் அடித்து எச்சரித்து அனுப்புவார்கள். அதனையும் மீறி அவர்கள் படிக்கட்டில் அமர்ந்தால் 400 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.