இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 39 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குண்டு சத்தங்களுடன் காசா நகர் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இவர் ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. மேலும், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் இஸ்ரேல் வருத்தப்படுவார்கள் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்குமான போர் தற்போது திசைமாறி ஈரான் - இஸ்ரேல் என இரு நாடுகளுக்கு இடையேயான போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தைக் கூட்டியுள்ளது.
இதனிடையே, கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏராளமான மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பள்ளியின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.