இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் கரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட மூத்த தளபதிகள் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
இந்த சம்பவம் நடந்த சில தினங்களில் ஈரான் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் பயன்பாட்டில் இருந்துவந்த பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியது. இதற்கு இஸ்ரேலின் உளவு அமைப்புதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த 1 ஆம் தேதி இரவு இஸ்ரேல் மீது 100 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தது.
இதற்கு, ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் , லெபனானுக்குள் புகுந்து இஸ்ரேல் படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லெபனானின் வடக்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கும் ஒரு குடியிருப்பின் மீது இஸ்ரேல் இன்று காலை வான்வழி தாக்குதல் நடத்தியது. பாலஸ்தீன மக்கள் வசித்துவரும் இந்த முகாமில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவான முக்கிய தளபதி சயது அதுல்லா அலி தனது குடும்பத்திடன் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டின் மீது மட்டும் நடந்த இந்த துல்லிய தாக்குதலில் சயது அதுல்லா அலி அவரது மனைவி ஷியாமா அசீம், இரு மகள்கள் சைனப், பாத்திமா என குடும்பத்தினர் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.