உகாண்டா தலைநகர் கம்பாலாவில், இந்திய பாரா - பேட்மிண்டன் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே நேற்று (16.11.2021) தீவிரவாதிகள், இரட்டை மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். உகாண்டாவின் மத்திய போலீஸ் நிலையத்திற்கும், அந்த நாட்டின் பாராளுமன்றத்திற்கும் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த இரட்டை மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையே, இந்த தாக்குதலில் இந்திய வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என இந்திய பாரா - பேட்மிண்டன் அணி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இந்திய அணி வீரர்கள் இருந்ததாகவும் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாரா - பேட்மிண்டன் அணி, உகாண்டா பாரா - பேட்மிண்டன் சர்வதேச போட்டியில் பங்கேற்க அந்த நாட்டிற்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.