Skip to main content

5ஜி அம்சத்துடன் களமிறங்கும் ஆப்பிள்... எந்தெந்த மாடல்கள் எவ்வளவு விலை..?

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

iphone 12 series specs and price in india

 

முதன்முறையாக 5ஜி தொழில்நுட்பத்துடன் ஆப்பிள் நிறுவனம் நான்கு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

ஐபேட் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மற்றும் மலிவு விலை வாட்ச் எஸ்ஈ ஆகிய தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது. இவை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கலிஃபோர்னியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஐஃபோன் 12 மாடலை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். ஐஃபோன் 12 மினி, ஐஃபோன் 12, ஐஃபோன் 12 ப்ரோ, ஐஃபோன் 12 ப்ரோ மேக்ஸ் என நான்கு வேரியண்ட்களில் வரும் இந்த மாடல்கள் ரூ.69,990 முதல் ரூ.1.2 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

5.4 இன்ச் அகல ஐஃபோன் 12 மினி ரூ.69,990 -க்கும், 6.1 இன்ச் அகல ஐஃபோன் 12 மற்றும் ஐஃபோன் 12 ப்ரோ ஆகியவை முறையே ரூ.79,990 மற்றும் ரூ.1.19 லட்சம் ஆகும். அதேபோல 6.7 இன்ச் அகல ஐஃபோன் 12 ப்ரோ மேக்ஸ் ரூ.1,29,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் அமேசானின் அலெக்ஸா மற்றும் கூகுளின் எக்கோ ஆகியவற்றிற்கு போட்டியாக மினி ஹோம்பாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு வந்த குறுந்தகவல்; ஆப்பிள் நிறுவனத்துக்கு  மத்திய அரசு நோட்டீஸ்!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Central government notice to Apple for message received by opposition MPs

 

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசாங்கம் தனது செல்போனை ஹேக் செய்ய முயற்சிப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளதாக கடந்த 31 ஆம் தேதி காலை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “எனது தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சலை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எனக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. அதானி மற்றும் பி.எம்.ஓ. நபர்களின் பயத்தை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, எனக்கு மற்றும் இந்தியா கூட்டணியின் மூன்று தலைவர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கை வந்துள்ளது” என்று தெரிவித்தார். அது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இதனையடுத்து, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, ’உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம்” என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. 

 

இந்த குறுஞ்செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சசி தரூர், மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசைக் கண்டித்து பதிவிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது செல்போனை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்” என்று தெரிவித்தது. 

 

இதனிடையே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதினர். ஆனால், அவர்கள் வைத்திருந்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘இந்திய கம்ப்யூட்டர் அவசரகால நடவடிக்கை குழு (சி.இ.ஆர்.டி), இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர், “எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்படுவதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் சி.இ.ஆர்.டி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு அவர்கள் (ஆப்பிள் நிறுவனம்) தேவையான ஒத்துழைப்பு தருவார்கள்” என்று கூறினார். 

 

 

Next Story

“செல்போனை ஒட்டுக் கேட்பது குற்றவாளிகள் செய்யும் செயல்” - ராகுல்காந்தி எம்.பி.

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Rahul Gandhi talks about Cell phone tapping

 

இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் பயன்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்போன் உரையாடல்கள் அரசின் ஏற்பாட்டில் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சசி தரூர், மஹுவா மொய்த்ரா, ராகவ் சத்தா, பிரியங்கா சதுர்வேதி ஆகிய 4 எம்.பி.க்கள் உட்பட 10 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இந்த எச்சரிக்கை செய்தியை அனுப்பி உள்ளது.

 

இவர்கள் மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Rahul Gandhi talks about Cell phone tapping

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கும் செயலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில், “செல்போனை ஒட்டுக் கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல. குற்றவாளிகள் செய்யும் செயல்” எனத் தெரிவித்தார்.

 

கடந்த 2019 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாகச் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.