நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்கள் உருக்குலைந்தன. மேலும் நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த போரின் மூலம் பல்வேறு போர்க்குற்றச் செயல்கள் நடைபெறுவதாகக் கூறி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் முடிவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்ய நீதிமன்றம் கைது வாரண்ட் ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது வாரண்டில், "உக்ரைன் குழந்தைகள் சட்டவிரோதமான முறையில் நாடுகடத்தப்படுகின்றனர். மேலும் அவ்வாறு கடத்தப்பட்ட குழந்தைகள் சட்டவிரோதமாக ரஷ்யக் கூட்டமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனவே இதுபோன்ற போர்க்குற்றங்களுக்கு ரஷ்ய அதிபரே பொறுப்பு" எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ரஷ்யாவின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்செய்வனவுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் ஒன்றைப் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய அதிபருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.