இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், சுமார் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இஸ்ரேல் மீது 100 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக ஈரான் இந்த தாக்குதலை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அயான் டோம்களை தாண்டி இஸ்ரேல் முழுவதும் 1864 அபாய அலாரங்கள் ஒலிக்கப்பட்டன. தலைநகர் டெல் அவிவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. முன்னதாக ஈரான் ஆதரவு க்ஹவதி படையினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஜோர்டான் நாட்டில் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய மக்கள் ஈரானுக்கு அத்தியாவசிய பயணம் செல்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஒரே நாளில் 200 ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தி ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எச்சரித்திருக்கும் நிலையில் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என இந்திய ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.