சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற உள்ள நிலையில், சர்வதேச நலஅமைப்பான ஆக்ஸ்ஃபாம், உலகநாடுகளின் பொருளாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவை பற்றிய பொருளாதார அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபாம் தனது அறிக்கையில், 'இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களாகிய ஒரு சதவீத மக்களின் சொத்து மதிப்பு கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் முக்கியமாக இந்தியாவில் கோடீஸ்வரர்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஆண்டுக்கு ஆண்டு நாட்டில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து கொண்டே வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல. இந்திய கோடீஸ்வரர்களின் சொத்துக்கள் கடந்த ஆண்டில் மட்டும் 2200 கோடி அதிகரித்துள்ளது. ஆனால் 2004 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது இருந்த 10 சதவீதம் ஏழைகள் இன்னும் அதே நிலையில் தான் உள்ளனர். இந்தியாவில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்கள் தான் நாட்டின் ஒட்டுமொத்த சொத்தில் 77.4 சதவீத சொத்துகளையும் வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக வெறும் 9 பணக்காரர்கள் மட்டும் நாட்டின் சொத்து மதிப்பில் 50 சதவீதத்தை வைத்துள்ளனர். நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தை சார்ந்த 60 சதவீத மக்களிடம் மொத்தமாக நாட்டின் 4.8 சதவீத சொத்துகள் மட்டுமே உள்ளன. மேலும் இந்தியாவில் உள்ள 119 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடியாகும். என கூறப்பட்டுள்ளது.