கரோனா வைரஸ் காலத்தில் உலக சுகாதார அமைப்பு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற 62 நாடுகளின் முடிவுக்கு இந்தியாவும் ஆதரவளித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் தொடங்கி இன்று லட்சக்கணக்கான மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது கரோனா வைரஸ். இந்நிலையில் இந்த வைரஸ் பரவலில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாகக் குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியுதவியும் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 62 நாடுகள் ஒன்றிணைந்து, இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என முடிவெடுத்தன.
ஜெனீவாவில் இன்று நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் 73-வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டத்தில் இந்த 62 நாடுகளும் சேர்ந்து இதற்கான திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளது, அதைத்தொடர்ந்து அதுகுறித்து விவாதம் நடபெறவும் உள்ளது. கரோனா வைரஸ் எவ்வாறு உருவானது, விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது, அதைத்தடுக்க உலக சுகாதார அமைப்பு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது என்பது குறித்து விசாரணை நடத்த இந்த நாடுகள் முடிவெடுத்துள்ளன. இந்த சூழலில் இந்த 62 நாடுகளின் முடிவுக்கும் இந்தியா ஆதரவு அளித்துள்ளது.