தொழில் தொடங்குவதற்கு தகுந்த சூழல் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 73ஆவது இடத்தில் உள்ளது.
ஆண்டு தோறும் தொழில் தொடங்க தகுந்த சூழல் உள்ள நாடுகள் என்று உலக வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான புதிய பட்டியலை நேற்று உலக வங்கி வெளியிட்டது. கடந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் இந்தியா 100ஆவது இடத்தில் இருந்தது. இந்த வருடம் 23 இடங்கள் முன்னேறியுள்ளது பலருக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 190 நாடுகள் இடம்பெற்றுள்ளன. தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் முதல் நான்கு இடத்தை நியூசிலாந்து, சிங்கப்பூர், டென்மார்க், ஹாங்காங் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. உலகை பொருளாதார தடையை வைத்து அச்சுருத்தும் அமெரிக்கா இந்த பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது.
நாடுகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், வரி விதிப்பு முறை, தொழில் தொடங்குவது, அந்நிய முதலீடுகள் தொடர்பான அரசின் முக்கிய கொள்கைகள், திவால் தொடர்பான சட்டங்கள், ஒப்பந்தங்களை அமல்படுத்துவது, கட்டுமான அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.