உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு அஞ்சாமல், உக்ரைன் மீதான ராணுவப் படையின் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. தலைநகர் கீவ், மரியுபோல், லிவிவ் ஆகிய நகரங்களில் குண்டுமழை பொழிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த போர் தொடங்கியதற்குப் பிறகு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு பெருமளவு உயர்ந்துள்ளது.
கடந்த இரு வாரங்களில் சுமார் 40 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய்யின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் உயர்ந்துள்ள நிலையில், இதன் காரணமாகப் பல நாடுகளில் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்தியாவிலும் இந்த அச்சம் நிலவி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடமிருந்து 30 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களை மலிவு விலைக்கு வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் இந்த முடிவு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைக் கோபப்படுத்தலாம் எனச் சிலர் கூறிவந்த நிலையில், இந்தியாவின் இந்த செயல் தங்களது பொருளாதாரத் தடைகளை மீறிய செயல் அல்ல என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் பசாகி இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "நாங்கள் பரிந்துரைத்துள்ள மற்றும் அறிவித்துள்ள பொருளாதாரத் தடைகளை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஆனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் நடவடிக்கை பொருளாதாரத் தடையை மீறியதாக நாங்கள் கருதவில்லை.
ஆனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, இந்தியாவை வரலாற்றில் தவறான பக்கத்தில் நிறுத்தும்" எனத் தெரிவித்தார். இந்தியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத சூழலில், திட்டமிட்டபடி இந்தியா தனது கொள்முதலை மேற்கொண்டால் வருங்காலத்தில் ஏற்படவிருக்கும் எரிபொருள் விலையேற்றத்தைப் பெருமளவு குறைக்கலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.