தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள கொய்யாடா பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமெளலி. இவரது மகன் ரவி தேஜா (25). ரவி தேஜா கடந்த 2022ஆம் ஆண்டு தனது முதுகலை படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். தனது படிப்பை முடித்த ரவி தேஜா, அங்கேயே வேலை தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் வாஷிங்டன் அவென்யூவில் ரவி தேஜா, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ரவி தேஜாவின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் பற்றிய விவரங்கள் இன்னும் தெளியாக வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ரவி தேஜாவின் திடீர் மரணம் ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், மத்திய மற்றும் மாநில அரசு தூதரகத்தைத் தொடர்புக் கொண்டு ரவி தேஜாவின் உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு மாணவர் அமெரிக்காவில் கொல்லப்பட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு ரவி தேஜா கொல்லப்பட்டுள்ளார். தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான சாய் தேஜா நுகராபு, கடந்த நவம்பர் 30ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சிகாகோ அருகே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் மர்மமான முறையில் கொல்லப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.