Skip to main content

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இந்தியா எதிரி நாடுதான் இருந்தாலும்...” - பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Pakistan Opposition Leader says Though India is an enemy country

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. கடைசிக் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் ஜூன் 4ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டன. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது, தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர் சையத் ஷிப்லி ஃபராஸ், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலை இந்தியா சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தியதற்காகப் பாராட்டியதோடு, தனது நாட்டிலும் இதேபோன்ற செயல்முறையை நடத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் செனட்டில் பேசிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் சையத் ஷிப்லி ஃபராஸ், “எதிரி நாட்டின் உதாரணத்தை நான் மேற்கோள் காட்ட விரும்பவில்லை. இருந்தாலும் சமீபத்தில், அங்கு (இந்தியா) தேர்தல்கள் நடத்தப்பட்டன.  800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர். ஆயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான வாக்குச் சாவடிகள் இருந்தன. சில வாக்குச் சாவடிகள் ஒரு இடத்தில் ஒரு வாக்காளருக்காகவும் அமைக்கப்பட்டன. ஒரு மாத காலப் பயிற்சி முழுவதும் இ.வி.எம்கள் மூலம் நடத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலில் முறைகேடு நடந்ததா என்று இந்தியாவில் இருந்து ஒரு குரல் கூட கேட்கவில்லை. 

எவ்வளவு சீராக மின்சாரம் பரிமாறப்பட்டது. நாமும் அதே நிலையில் இருக்க விரும்புகிறோம். இந்த நாடு சட்ட உரிமைக்காகப் போராடி வருகிறது. இங்கே, வாக்கெடுப்பில் தோற்றவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மேலும் வெற்றியாளரும் அவரது சொந்த விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்படியான அணுகுமுறை நமது அரசியல் அமைப்பை வெறுமையாக்கியுள்ளது” என்று கூறினார். 

Next Story

‘பாகிஸ்தானிலிருந்து வரும் உத்தரவுக்காகக் காத்திருந்தோம்’ - ஐஎஸ்ஐ பயங்கரவாதிகளின் பரபரப்பு வாக்குமூலம்

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
sensational confession of arrested persons in gujarat

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய்படேல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு கடந்த 20ஆம் தேதி தகவல் கிடைத்தது. அதன்படி, பயங்கரவாதிகளை பிடிக்க, போலீசார் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று பயணிகளை கண்காணித்து வந்தனர். இதனையடுத்து, இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு படை அதிரடியாக கைது செய்தது. 

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ரகசிய இடத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பாகிஸ்தானுக்குச் சென்று அந்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களை வாங்குவதற்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் முகமது பாருக் (35), முகமது நப்ரன் (27), முகமது ரஸ்தீன் (43), முகமது நஸ்ரக் (35) என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், கைதான நான்கு பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், ‘இதுவரை நடந்த விசாரணையின் போது, பயங்கரவாத தாக்குதலை எங்கு நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டனர். அவர்கள் இதுவரை கூறியது என்னவென்றால், அவர்கள் ஆயுதங்களைச் சேகரித்த பிறகு, இலக்கின் சரியான இடம் மற்றும் நேரத்தைப் பற்றி பாகிஸ்தானில் இருந்து கையாளுபவர் அவர்களுக்குத் தெரிவிப்பார். பயங்கரவாதிகள் 14 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் திட்டங்கள் குறித்து ஏடிஎஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இந்தியாவில் அவர்களுக்கு உதவ வேண்டிய நபர்களைப் பற்றி அறிய விசாரணை நிறுவனம் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. 

அவர்களின் தொலைபேசி சாதனங்களின் தரவுகளை தடயவியல் பிரித்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களின் மொபைல் போன்களில் காணப்படும் தகவல் தொடர்பு பயன்பாடுகளில் இருந்து விவரங்கள் தேடப்படுகின்றன. அதன் மூலம் அவர்கள் தங்கள் பாகிஸ்தானிய கையாளுநருடன் தொடர்பில் இருந்துள்ளனர். பயங்கரவாதிகளின் மொபைல் போன்களும் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு, அவர்களின் திட்டங்களை செயல்படுத்த உதவியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும், தமிழ்நாடு வழியாக அகமதாபாத்துக்கு வந்தவர்கள் என்பதால், பிற மாநில காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு மற்றும் புலனாய்வு அமைப்புகளும் விசாரணையில் இணைந்துள்ளன’  என்று தெரிவித்துள்ளனர்.