Skip to main content

'ஒரு வாரம் ஆம்லெட் சாப்பிட மாட்டேன்'-தண்டனை கொடுத்துக்கொண்ட எலான் மஸ்க் 

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
nn

'ஸ்பேஸ் எக்ஸ்' என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவர் ஆவார். தற்போது டிவிட்டர் வலைதளத்தை எக்ஸ்(x) என்ற பெயரில் நடத்தி வருபவரும் அவரே. பல்வேறு விண்வெளி துறை தொடர்பான ஆராய்ச்சிகளையும், ரோபோக்கள் ஆகியவற்றையும் ஸ்பேஸ் நிறுவனம் கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தி வருகிறது.
 

அந்த வகையில் சமீபத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட் ஒன்று மத்திய சீனாவின் கோங்கி மலை பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது தானாகவே விண்ணில் பாய்ந்தது. சில நொடிகளில் கீழே விழுந்த ராக்கெட் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது. நடைபெற்ற இந்த விபத்து சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கட்டமைப்பு கோளாறு காரணமாக ராக்கெட் வெடித்துச் சிதறியதாகவும், அந்த மலைப்பகுதி மக்கள் யாரும் வசிக்காத பகுதி என்பதால் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் நியூயார்க்  டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியை அந்நாட்டு ஊடகவியலாளர் மைக் பெஸ்கா என்பவர் தன்னுடைய வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் .

அதில், யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பதிலளிக்கும் வகையில் ராக்கெட் வெடித்து சிதறியதில் அங்கு இருந்த ஒன்பது பறவை கூடுகள் அழிந்துள்ளது என பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கான பதிலை எலான் மாஸ்க் தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவில், 'இந்த கொடூர குற்றச்சாட்டுக்கு பரிகாரமாக ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன்' எனக் கிண்டலாக பதிலளித்துள்ளார். ஏற்கனவே எலான் மஸ்க் அதிரி புதிரியான தகவல்களையும், நக்கல் நையாண்டித் தனமான பதிவுகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி  வரும் நிலையில் எலான் மஸ்க்கின் இந்த பதிலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தயவுசெய்து யாரும் நம்ப வேண்டாம்” - ஷாலினி அஜித்குமார் வேண்டுகோள்

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
shalini ajithkumar said she is not in twitter

80-களில் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஷாலினி, தமிழில் விஜய்யின் 'காதலுக்கு மரியாதை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான 'அமர்க்களம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் அஜித்துக்கும் ஷாலினிக்கு இடையே காதல் மலர இருவரும் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு படங்களில் இருந்து விலகிய ஷாலினி பூப்பந்து விளையாட்டு நன்றாக விளையாடுவார் என்பது அனைவரும் அறிந்தது. அதோடு சட்டப் படிப்பும் முடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். 

கடந்த 2022ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாக்ராமில் இணைந்தார். அதில் தொடர்ச்சியாக அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து வந்தார். கடைசியாக கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி, அவரது 24வது கல்யாண நாளை முன்னிட்டு அஜித்துடன் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 

இன்ஸ்டாகிராமை தொடர்ந்து எக்ஸ் வலைதளத்தில் ஷாலினி அஜித்குமார் பெயரில் ஒரு அக்கவுண்ட் இயங்கி வந்தது. இதுவும் ஷாலினி இன்ஸ்டாகிராமில் இணைந்த அதே வருடமான 2022ல் அக்டோபர் மாதம் தொடங்கபட்டுள்ளது. ஆனால் அது போலி அக்கவுண்ட் என ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அக்கவுண்டை தயவுசெய்து யாரும் நம்ப வேண்டாம் எனவும் யாரும் பின்தொடர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

எச். ராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Supreme Court order passed on H. raja appeal 

தமிழக பாஜக நிர்வாகியான எச். ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் (எக்ஸ்) சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் எச். ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அச்சமயம் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் எச்.ராஜா மனு தாக்கல் செய்திருந்தார். 

Supreme Court order passed on H. raja appeal 

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ‘அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?’என எச். ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு எச். ராஜா தரப்பு வழக்கறிஞர், ‘ஆம்’ எனப் பதிலளித்தார். தொடர்ந்து எச். ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை எச். ராஜா சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டார். அத்தோடு எச். ராஜா தரப்பு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக நிர்வாகி எச். ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (14.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது எச். ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், “எச்.ராஜா தெரிவித்த கருத்துகள் எந்த பெண்களையும் அவமானப்படுத்தும் வகையில் தெரிவிக்கப்படவில்லை. இந்த பதிவு என்பது எந்த கலவரத்தையும் தூண்டுவதாக இல்லை” எனத் தெரிவித்தார்.

Supreme Court order passed on H. raja appeal 

இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், “பொது வாழ்வில் இருக்கும் ஒருவர் தான் என்ன பேச வேண்டும் என்பதை கவனமாக பேச வேண்டும். இது போன்று பேசுபவர்கள் நிராகரிக்கபட வேண்டும். மேலும் எச். ராஜா தரப்பு வாதத்தை ஏற்க முடியாது” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.